ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் அஸ்வின், ஜடேஜா

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இரு சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். 


பெங்களூர் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 

அதேநேரத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஓர் இடம் முன்னேற்றம் கண்டுள்ளார். 

ஜடேஜா, தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னர் 2008 ஏப்ரலில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினும், இலங்கையின் முத்தையா முரளீதரனும் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரே நேரத்தில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இரு இடங்கள் முன்னேறி 16-ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஓ"கீஃப், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஓர் இடம் முன்னேறி முறையே 28 மற்றும் 29-ஆவது இடங்களிலும் உள்ளனர்.


பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் விராட் கோலி ஓர் இடத்தை இழந்துள்ளார். இதனால் அவர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.


 இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 5 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தையும், அஜிங்க்ய ரஹானே இரு இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தையும், கே.எல்.ராகுல் 23 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா 6 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.


 மற்றொரு ஆஸ்திரேலியரான ஷான் மார்ஷ் 37-ஆவது இடத்தில் இருக்கிறார். 


ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

77 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (76 போட்டிகளில் முதலிடம்) அவர் முறியடித்துள்ளார். ஸ்டீவ் வாஹ் 94 போட்டிகளில் முதலிடத்தில் இருந்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

Post a Comment

0 Comments

Close Menu