ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-இல் இடைத் தேர்தல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல, கேரளம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள மூன்று மக்களவை இடங்கள் மற்றும் தில்லி, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம் உள்பட எட்டு மாநில சட்டப்பேரவைகளில் காலியாகவுள்ள 11 உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்வான டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை "காலியான தொகுதி' என்று அரசிதழில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குரிமை செலுத்த அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாடு முழுவதும் காலியாகவுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, மூன்று மக்களவைத் தொகுதிகள், தமிழகத்தின் ஆர்.கே. நகர் உள்ளிட்ட 12 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஆகியவற்றுக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
வாக்குப்பதிவு: இதில், தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்தத் தேர்தலுக்கான அறிவிக்கை முறைப்படி அரசிதழில் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 24. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 27 கடைசி நாள்.
வாக்குப்பதிவு ஏப்ரல் 12-இல் நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் ஏப்ரல் 17-க்குள் முடிக்கப்படும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
வெளி மாநிலங்கள்: தேமாஜி (அஸ்ஸாம்), போராஞ்ச் (ஹிமாசல பிரதேசம்), அடேர், பந்தவ்கர் (மத்திய பிரதேசம்), காந்த்தி தக்ஷிண் (மேற்கு வங்கம்), தோல்பூர் (ராஜஸ்தான்), நஞ்சன்கூடு, குண்டல்பேட் (கர்நாடகம்), லிதிபாரா (ஜார்க்கண்ட்), அப்பர் புர்துக் (சிக்கிம்) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-இல் இடைத்தேர்தல் நடைபெறும். இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 13-இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஆர்.கே. நகர் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அட்டவணை நாள்களில் கேரளத்தில் உள்ள மக்களவைத் தொகுதி, சிக்கிம் மாநிலத்தில் ஒரு பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 9, அனந்த் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைùபெறும். ஏப்ரல் 15-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இடைத் தேர்தல் ஏன்?: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல, கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அகமது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு ஏப்ரல் 12-இல் வாக்குப் பதிவும், ஏப்ரல் 17-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த மெஹபூபா முஃப்தி, அம்மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றங்களால் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து விட்டு மாநில முதல்வரானார்.

காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் குடியரசுக் கட்சித் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தில்லி ரஜெளரி கார்டன் சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஜர்னைல் சிங் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
வாக்காளர் பட்டியல்: தமிழகம், சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைப் பொருத்தவரையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்டு ஜனவரி 5-ஆம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்.கே.நகரிலுள்ள மொத்த வாக்காளர்களின் விவரம்:-
ஆண்கள் 1,28,305
பெண்கள் 1,34,307
மூன்றாம் பாலினத்தவர் 109
மொத்தம் 2,62,721
தேர்தல் அட்டவணை ஆர்.கே. நகர் தொகுதி
தேர்தல் அறிவிக்கை: மார்ச் 16
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்: மார்ச் 23
வேட்பு மனுக்கள் பரிசீலனை: மார்ச் 24
வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 27
வாக்குப்பதிவு: ஏப்ரல் 12
வாக்கு எண்ணிக்கை: ஏப்ரல் 15
Ads by ZINC

    Post a Comment

    0 Comments

    Close Menu