அவதூறு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிப்பு

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சென்னையை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிபதி கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்த விவகாரத்தில் ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், உச்ச நீதிமன்றம் இன்று வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கர்ணன் தற்போது மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
வழக்கின் பின்னணி: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி  விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் 10-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை அடுத்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த வாரம் அதன்மீது விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி கர்ணணை திங்கள்கிழமை (பிப்.13) நேரில் ஆஜராகி, "அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. அதுவரையிலும் அவர் எந்த நீதிமன்ற அலுவல்களிலும் ஈடுபடக் கூடாதென்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டபோதிலும், அவர் நேரில் ஆஜராகவில்லை. இதேபோல், அவரது தரப்பில் வழக்குரைஞரும் நியமிக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகாததற்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எங்களால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கிறோம். மார்ச் 10-இல் விசாரணை நடைபெறும் என்றனர் நீதிபதிகள்.
2-ஆவது கடிதம் பதிவு செய்யப்பட்டது: முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப்பதிவு செய்தது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அந்தக் கடிதம் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கடிதத்தில், நீதிபதி கர்ணன் தாம் தலித் என்பதால் பழிவாங்கப்படுவதாகவும், ஆதலால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை: இந்நிலையில், நீதிபதி கர்ணனால் நியமிக்கப்படாதபோதிலும், இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக சில வழக்குரைஞர்கள் ஆஜராகி வருவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதற்காக அந்த வழக்குரைஞர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Post a Comment

0 Comments

Close Menu