நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. முதலீடுகளும், உற்பத்தியும் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியிருப்பதால் அந்த இலக்கை எட்டிப்பிடிப்பது சாத்தியம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் குழுவானது அந்த அறிக்கையை தயாரிக்கும். அவ்வாறு நிகழ் நிதியாண்டுக்காக (2018-19) தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அது, நிகழ் நிதியாண்டில் 7.4 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் தேவைகள் அதிகரித்துள்ளன. அதன் விளைவாக உள்நாட்டில் ஏற்றுமதிக்கும், புதிய முதலீடுகளுக்கும் அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதைத் தவிர தொழில் உற்பத்தி விகிதங்களும் கணிசமாக உயரக் கூடிய சூழல் உள்ளது. இத்தகைய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நிகழ் நிதியாண்டில் பொருளாத வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமா fyக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டின் முதல் பாதியில் அது, 7.3-இலிருந்து 7.4 சதவீதமாகவும், இரண்டாம் பாதியில் 7.3-இலிருந்து 7.6 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. பணவீக்கத்தைப் பொருத்தவரை 4 சதவீதமாகக் குறைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டி விகிதம்: இதனிடையே, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேபோன்று பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) திருத்தியமைக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ ரேட் விகிதங்கள் மாற்றப்பட்டன. அதன் பின்னர், நான்கு முறையாக வட்டி விகிதங்களில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ரெப்போ ரேட் விகிதம் 6 சதவீதமாகவே தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதத்திலும் மாற்றமில்லை என்றும் அது 5.75 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Post a Comment

0 Comments

Close Menu