நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை தில்லியில் மத்திய அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் "பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது.

மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.
இந்நிலையில் நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை தலைநகர் தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு இன்று திறந்து வைத்தார்.
இந்த நிலையம் திறக்கப்படுவதன் மூலம் தில்லி விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி விமான நிலைத்தில் தற்போது தினமும் சராசரியாக 40 முதல் 50 ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்கும் சேவைகள் நடைபெறுகின்றன.

பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை, அவசரகால மருத்துவ சேவை, சட்டம்-ஒழுங்கு கண்காணிப்புப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் இந்த நிலையம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

Post a Comment

0 Comments

Close Menu